Last Updated : 24 Oct, 2020 02:32 PM

 

Published : 24 Oct 2020 02:32 PM
Last Updated : 24 Oct 2020 02:32 PM

அக்.28-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

வரும் 28-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கப்பட உள்ளது.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனிடையே கடந்த மே மாதம் 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கிய நிலையில் மாநிலத்துக்குள்ளேயே உள்ளூர் பேருந்துகள் இயக்க அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மே 20 ஆம் தேதி முதல் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) மூலம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

அதேபோல், மே 21 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லா பிஆர்டிசி பேருந்து இயக்கப்பட்டது. இதனிடையே 5 ஆம் கட்டத் தளர்வுக்குப் பின் தனியார் பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்த நிலையில், பேருந்துகள் இயக்கப்படாத 6 மாத காலத்துக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதனை முதல்வர் ஏற்று 2 காலாண்டுக்கு சாலை வரி ரத்து செய்யப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். இதையடுத்து, கடந்த 22 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி முதல் பொதுமக்கள் நலனுக்காக பிஆர்டிசி நிர்வாகம் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு தினமும் பேருந்து இயக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இன்று (அக். 24) கூறும்போது, "வரும் 28 ஆம் தேதி முதல் பொதுமக்கள் நலனுக்காக பிஆர்டிசி நிர்வாகம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்றுவர தினமும் பேருந்து இயக்கப்பட இருக்கிறது. இதற்கான பயணக் கட்டணம் ரூ.275 மற்றும் முன்பதிவுக் கட்டணம் ரூ.25 என ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து புதுச்சேரியில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும். இதே பேருந்து பெங்களூருவில் இருந்து தினமும் நண்பகல் 12.30 மணிக்குப் புறப்படும்.

இந்தப் பேருந்தில் அரசு உத்தரவுப்படி தனிமனித இடைவெளி காரணமாக அதிகபட்சமாக 33 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்ல இருக்கும் பயணிகள் பயணம் இனிதே அமைய புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள பிஆர்டிசி முன்பதிவு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் சென்றுவர (RETURN TICKET) பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x