Published : 24 Oct 2020 11:56 AM
Last Updated : 24 Oct 2020 11:56 AM

குறைபாடுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பெங்களூரு பயணம் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு ஆட்சியர் விளக்கம்

`கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடுள்ளவை, அரசியல் கட்சியினரி டம் முறையாக தெரிவித்த பின்னரே பெங்களூருவுக்கு சரிசெய்ய கொண்டு செல்லப்பட்டன என, மாவட்ட தேர்தல் அலுவலரான, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், திங்கள்நகரில் உள்ள வேளாண்விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் உள்ள பழைய பதிவுகளை அழித்தல் மற்றும் குறைபாடுகளை சரிசெய்யும் பணியில் திருச்சி பெல் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர். அனைத்து அரசியல் கட்சிகளின் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், இதன்மூலம் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சிகள் கூறின. திங்கள்நகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மறியலில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக, குமரி மாவட்ட தேர்தல் அலுவலரான, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கூறியிருப்பதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி முதல்இம்மாதம் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 4,546 வாக்குப்பதிவு கருவிகள், 3,531 கட்டுப்பாட்டு கருவிகள், 3,872 விவிபாட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இதில் 4,522 வாக்குப்பதிவு கருவிகள், 3,407 கட்டுப்பாட்டு கருவிகள், 3,714 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை வாக்குப்பதிவுக்கு தகுதி உடையவையாக இருந்தன. மீதமுள்ள 24 வாக்குப்பதிவு கருவிகள், 124 கட்டுப்பாட்டு கருவிகள், 158 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை குறைபாடு உடையவையாக கண்டறியப்பட்டது.

இவற்றை சரி செய்வதற்காக, பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு முந்தைய தினமே தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 20-ம் தேதி பகல் 11.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு, குறைபாடுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, 3 வருவாய்த்துறை அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மீதமுள்ள தகுதியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கிட்டங்கி யில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப் பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை உடையதாகும். இதில் பொதுமக்களுக்கு எவ்வித ஐயப்பாடும் இருப்பின் வாக்குப்பதிவு அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியரை தொடர்பு கொண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x