

சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்ட திமுக செயலாளர்களை 3 ஆக உயர்த்த திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.
9 சட்டப்பேரவைத் தொகுதி களை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள் அதிமுக வசம், 4 தொகுதிகள் திமுக வசம் உள்ளன.
அதிமுகவைப் பொறுத்தவரை கடலூர் மாவட்டச் செயலாளர் களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. ஒரு மாவட்ட செயலாளருக்கு தலா 3 தொகுதிகள் வீதம் 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திமுகவிலும் மாற்றியமைக்க ஆலோசித்து வருவதாக கட்சி யின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
தற்போது கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 தொகுதிகள் அடங்கிய கடலூர் கிழக்கு மாவட்டச் செயலா ளராக முன்னாள் அமைச்சரும் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார்.
பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக திட்டக்குடி சட்டப்பேரவை உறுப் பினர் வெ.கணேசன் செயல்பட்டு வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கட்சியின் தொண்டர்கள் மற்றும் கடைநிலை நிர்வாகிகளை எளிதில் அணுகும் வகையில் மாவட்டத்தை 3 ஆக பிரித்து, கூடுதலாக ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை திட்டுமிட்டு வருவதாக கடலூர் மாவட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அதன்படி கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய தொகுதிகள் அடங்கிய கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி அடங்கிய கடலூர் மேற்குமாவட்டத்திற்கு வெ.கணேசன்,சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகள் அடங்கிய கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு புதிதாக ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இளைஞ ரணியினருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஒரு சாரர் கூறிய கருத்தின் அடிப்படையில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், விருத்தாசலம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பி.முத்துக்குமார், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், கடலூர் சுந்தர் மற்றும் முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் ஆகியோரையும் கட்சித் தலைமை பரிசீலித்தாகவும், அதில், சிலர் இந்த மாவட்ட செயலாளர் பொறுப்பை ஏற்க முன்வரவில்லையென்றும் கூறப்படுகிறது.
பண்ருட்டி ஒன்றிய செயலா ளரும், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப் பினருமான சபா ராஜேந்திரன் மேற்கு மாவட்டத்திற்கு நியமிக்கக் கூடும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள 63 திமுக மாவட்டச் செயலாளர்களில் கணேசன் மட்டுமே பட்டிய லினத்தவர் என்பதால் அவரை மாற்ற கட்சித் தலைமை விரும்பவில்லை என தெரிவித்து விட்டதாம்.
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு சபா ராஜேந்திரன் முயற்சித்து வரும் நிலையில், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவுடன் புவனகிரி சரவணனும் தீவிரமாக களத்தில் இறங்கியிருப்பதால், புதிய மாவட்டச் செயலாளர் வாய்ப்பு யாருக்கு என்பதில் போட்டி நிலவி வருகிறது.