விவசாயி தலையில் குத்திய மரக்குச்சிகளை அகற்றி விழுப்புரம் அரசு மருத்துவர்கள் சாதனை

மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குமார் .
மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குமார் .
Updated on
1 min read

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விவசாயின் தலையில் குத்திய குச்சிகளை 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

செஞ்சி அருகே மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் குமார் (42). விவசாயியான இவர் கடந்த 7- ம்தேதி பைக்கில் வந்த போது திடீரென நாய் குறுக்கே ஓடியது. அவர் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புதரில் விழுந்தார். அப்போது, மரக் கொம்புகள் தலையில் குத்தி துளைத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் விழுப் புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

அவரை சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது இடது பக்க மூளையில் 4 செ.மீட்டர் தடிமன், 7 செ.மீட்டர் நீளமுள்ள மரக்குச்சி, 5 செ.மீட்டர் ஆழத்திற்குள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருத்துவக் கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி மேற்பார்வையில் மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பல்லவன் தலைமையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கபிலன், சவுந்தர்ராஜன், சுரேஷ் , பயிற்சி மருத்துவர்கள் கோகுல குமரன், செந்தில், நாராயணன், மயக்கவியல் துறை மருத்துவர்கள் தர்மலிங்கம், அறிவழகன், பத்ம ரூபினி ஆகியோர் கொண்ட குழுவினர் குமாருக்கு இரண்டு கட்டங்களாக 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். ‘ரிங் கிரேனியக்டமி’ முறையில் 5 மணி நேரம்அறுவை சிகிச்சை செய்து மூளை யில் குத்தியிருந்த மரக்குச்சியை அகற்றி சாதனை செய்தனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவி தேவி கூறியதாவது: குமாருக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் ரூ.15 லட்சம் வரை செலவாகி யிருக்கும். முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அவருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in