

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொன்னை யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதையடுத்து, ஆட்சியர் சண்முக சுந்தரம் நேரில் ஆய்வு செய்து மலர் தூவி வரவேற்றார்.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் சித்தூர் அருகேயுள்ள கலவகுண்டா ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. அங்கிருந்து மதகுகள் வழியாக உபரி நீர் பொன்னையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுமார் 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வேலூர் மாவட்டம் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப் பணை முழுமையாக நிரம்பி உபரிநீர் நேற்று வெளியேறியது.
மலர் தூவி வரவேற்பு
தடுப்பணையின் வலது மற்றும் இடதுபுறம் கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொன்னையாறு தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சண்முகம் உள்ளிட்டோர் நேற்று பார்வை யிட்டு மலர் தூவினர். தடுப் பணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி பொன்னையாற்றில் சுமார் 2,500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேறி வருகிறது.
நிரம்பும் ஏரிகள்
பொன்னையாற்றின் கிழக்கு கால்வாய் வழியாக 165 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக 18 ஏரிகள் பயன்பெறும் என்ற நிலையில், ஏற்கெனவே 10 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதேபோல், தடுப்பணையின் மேற்கு கால்வாய் வழியாக மொத்தம் 104 ஏரிகள் பயன்பெறும். இந்தக் கால்வாயில் 1,365 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. இதில், 6 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அடுத்தடுத்துள்ள ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். அடுத்த பத்து நாட்கள் தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் வலது கால்வாய் வழியாக பயன்பெறும் 104 ஏரிகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொன்னையாறு, கவுன்டன்யா ஆறு, பாம்பாறு, மண்ணாற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகள் நிரம்பி வருகின்றன. வரும் நாட்களில் பருவமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் 12, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஏரிகள் முழுமை யாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரி களும் வேகமாக நிரம்பி வருகிறது என பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்தார்.