Published : 24 Oct 2020 10:54 AM
Last Updated : 24 Oct 2020 10:54 AM

தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் கனமழை அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: மலர் தூவி வரவேற்ற ஆட்சியர் சிவன் அருள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மலர் தூவி வரவேற்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதேபோல, வாணி யம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அங்கு பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி வருகிறது.

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான நாராயணபுரத்தை யொட்டியுள்ள புல்லூர் தடுப்பணை நேற்று நிரம்பி வழிந்தது. இதனால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மாதகடப்பா, புளியமரத்துபெண்டா, வெலதிகாமணி பெண்டா, சிந்தகாமணிபெண்டா உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான சிலம்புகுட்டை கானாறு, மாமரத்து கானாறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் வழியாக அம்பலூர் பாலாற்றுக்கு நேற்று வந்தது.

இந்த ஆண்டு 3-வது முறையாக அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு நேற்று ஏற் பட்டுள்ளது. இதையறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மலர் தூவி வர வேற்றார்.

அம்பலூர் பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடையாஞ்சி பாலாற்றிலும் நேற்று புது வெள்ளம் பாய்ந்தோடியது. இதை யறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடையாஞ்சி பாலாற்றுப்பகுதிக்கு வந்து மலர்தூவி கற்பூரம் ஏற்றி புது வெள்ளத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதன் மூலம் வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, கேத்தாண்டப்பட்டி, திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கொடையாஞ்சி பாலாற்றில் இருந்து தேவஸ்தானம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகல் ஏரிக்கு மழைநீர் செல்ல அங்குள்ள கால் வாய்களை மாவட்ட நிர்வாகம் தூர்வார வேண்டும் என்றும், பள்ளிப்பட்டு ஏரிக்கு நீர் செல்ல கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவ சாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையால் பாலாற்றின் கிளை ஆறுகளில் மட்டுமே தண்ணீர் வரத்து இருக்கும். ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கங்குத்தி காடுகளில் நீர்பிடிப்புப்பகுதிகளில் தொடர் மழை பெய்து, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 29 தடுப்பணைகளும் முழுமையாக நிரம்ப வேண்டும்.

அதேபோல, கர்நாடக மாநிலம், ராம்சாகர் அணை, பேத்தமங்கலம் அணைப்பகுதியில் கனமழை பெய்தால் பிரதான பாலாற்றில் பெரும் வெள்ளம் வரும்.இதன் மூலமே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாசன வசதியும், தண்ணீர் பஞ்சமும் ஓரளவுக்கு தீரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x