

கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அய்யலுசாமி (92). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர் 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார்.
பெருமாள்பட்டி ஊராட்சித் தலைவராகவும், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அய்யலுசாமி, கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 2.50 மணிக்கு காலமானார்.
அவரது உடலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அய்யலுசாமியின் மனைவி ஏற்கெனவே மறைந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர்.