

பயோ மெட்ரிக் முறை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நிறுத்தப்படவில்லை என்று மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காரிப் பருவத்தில் 2.75 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக வெங்காயம் பயிரிடப்படும் இடங்களில் மழை காரணமாக அறுவடை தாமதமாகிறது. வெங்காய விலை ஏற்றம் என்பது தற்காலிகமான ஒன்று. அதை சரிசெய்யவே பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நியாய விலைக் கடைகள் மூலமாகவும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசின் குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த பின், நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை உயர்த்தி தருவார்கள் என நம்புகிறோம்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல் தவறானது. அதில்உள்ள பயோமெட்ரிக் முறை மட்டும் சிறுசிறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை என்றார்.