

இடஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை கண்டறிய உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக வன்னியர்கள் உள்ளனர். மக்கள்தொகையில் வன்னியர்களின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகம். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருந்ததால்தான், 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம்.
கடந்த 1987-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் சாலைமறியல் போராட்டத்துக்குப் பிறகு 1989-ம்ஆண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பின் 31 ஆண்டுகள் ஆகியும் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
3 பேர் ஆணையம்
பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 19 சதவீத இடஒதுக்கீடு தவிர, எஞ்சிய 81 சதவீத இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையம் அதன் அறிக்கையை டிசம்பர் மாதத்துக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
மருத்துவப் படிப்பு உள்ளிட்ட கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதைச் செய்ய அரசு தயங்கினால் பாமக, மக்களைத் திரட்டி, தொடர் சாலைமறியலைவிட கடுமையான போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.