Published : 24 Oct 2020 06:56 AM
Last Updated : 24 Oct 2020 06:56 AM

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி: சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடக்கம்

கோ-ஆப்டெக்ஸ் சார்பில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடத்தப்படும் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியை தொடங்கிவைத்து, கண்காட்சியில் இடம்பெற்ற பட்டு மற்றும் பருத்திச் சேலை ரகங்களை பார்வையிடுகிறார் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி. உடன் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை பொதுமேலாளர் அலோக் பாப்லே, முதுநிலை மண்டல மேலாளர் ஏ.கோபால் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்.

சென்னை

கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிபிஆர் ஆர்ட் சென்டரில் நேற்று தொடங்கியது.

கோ-ஆப்டெக்ஸ் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு கைத்தறி பட்டு மற்றும் பருத்தி சேலைகள் விற்பனை கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுசிறப்பு விற்பனை கண்காட்சி தொடக்க விழா சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபிஆர் ஆர்ட் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில்சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி பங்கேற்று கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

இந்த கண்காட்சியில் ஆர்கானிக் பருத்தி சேலைகள், காரைக்குடி செட்டிநாடு பருத்தி சேலைகள், புதிய நேர்த்தியான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் பருத்தி சேலைகள், பாரம்பரியம் மிக்கஅருப்புக்கோட்டை, திண்டுக்கல், மதுரை மற்றும் திருச்சி சேலைகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஆடம்பரமான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆரணி பட்டு சேலைகள், நெகமம், பரமக்குடி, நவநாகரீக சேலம் சேலைகள் மற்றும் பலவிதமான கைத்தறி ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் குர்த்தீஸ், ஸ்டோல்ஸ், ஆயத்த ஆடைகள், திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள், யோகாசன விரிப்புகள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

30 சதவீதம் தள்ளுபடி

இக்கண்காட்சி தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.கோபால் கூறும்போது, இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைத்தறி பட்டு மற்றும் பருத்தி துணி ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சி நவம்பர் 2-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும். கடந்த ஆண்டு ரூ.13 லட்சத்துக்கு துணி ரகங்கள் விற்பனை ஆயின. இந்த ஆண்டு ரூ.15 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கண்காட்சி தொடக்க விழாவில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை பொதுமேலாளர் அலோக் பாப்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x