மோசமான நிலையில் தமிழக நூலகங்கள்: இளங்கோவன் குற்றச்சாட்டு

மோசமான நிலையில்  தமிழக நூலகங்கள்: இளங்கோவன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள நூலகங்கள் மோசமான நிலையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இளங்கோவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக நூலகத்துறைக்காக உள்ளாட்சி அமைப்புகளில் 10 சதவீத நூலக வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 120 கோடி கிடைக்கிறது.

நூலகத்துறையைச் சேர்ந்தவர்களைத்தான் நூலகத்துறை இயக்குநராக நியமிக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையைச் சேர்ந்தவர்களையே நூலகத்துறை இயக்குநர்களாக நியமித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 531 கிளை நூலகங்களுக்கு ரூ. 68 கோடி மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. பதிப்பாளர்களுக்கு ரூ. 36 கோடி நிலுவை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசு வழங்கிய ரூ. 12 கோடி நூலக நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தவில்லை.

உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியாக பராமரிக்கப்படவில்லை. இங்குள்ள 4 அரங்குகளும் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்படாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் நூலகர்கள் நியமிக்கப்படவில்லை. புகழ்பெற்ற சென்னை கன்னிமாரா நூலகத்தில் 75 பதவிகள் காலியாக உள்ளது. கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நிரந்த புத்தக விற்பனை நிலையம் முடங்கியுள்ளது. மொத்தத்தில் தமிழகத்தில் நூலகங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in