Published : 24 Oct 2020 06:40 AM
Last Updated : 24 Oct 2020 06:40 AM

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் அளிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமும், சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு ரூ.5 லட்சமும் வங்கிக்கடன் பெறலாம். இதற்கு 25 சதவீதம் மானியமும் உண்டு. விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி), பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ஆகியோருக்கு 45 ஆகும்.

இந்தத் திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 285 பயனாளிகளுக்கு ரூ.1.8 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி, சேவை, விற்பனை தொழில்கள் செய்ய விரும்பும் தகுதியான நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர் கிண்டிதொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் மற்றும் வணிகத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 9487239561 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x