

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.223 கோடியே 65 லட்சம் மதிப்பிலான மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக கட்டிடங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில்பேசிய முதல்வர் பழனிசாமி, நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கடந்த நவம்பரில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, வீரசோழபுரத்தில் ரூ.104 கோடியே 44 லட்சம் மதிப்பில் 28 ஆயிரத்து 482 ச.மீ. பரப்பில், தரைதளம் மற்றும் 8 தளங்களுடன் கட்டப்பட உள்ள கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதில், அனைத்துத் துறை அலுவலகங்கள், குழந்தைகள் நலவாரியம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர்நலத் துறை, மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம்
அதேபோல், பேரவையில் கடந்தஆண்டு ஜூலை மாதத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமிவெளியிட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 37- வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பரில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, செங்கல்பட்டு வட்டம் வேண்பாக்கத்தில் ரூ.119 கோடியே 21 லட்சம் மதிப்பில், 27 ஆயிரத்து 62 ச.மீ. பரப்பில், தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட உள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.இந்த வளாகத்தில் வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள், ஆதார், இ-சேவைமையம் போன்ற அலுவலகக் கட்டிடங்கள் இடம் பெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பா.பெஞ்சமின், தலைமைச் செயலர் க.சண்முகம், வருவாய்த் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.