Published : 24 Oct 2020 06:27 AM
Last Updated : 24 Oct 2020 06:27 AM

‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தை 65 பேருக்கு செலுத்தியதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்புமருந்தான ‘கோவிஷீல்டு’ மருந்தின்முதல்கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்த நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முறை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1,600 பேருக்கு இந்த தடுப்புமருந்து பரிசோதனை நடைபெறுகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 65 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து 65 தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத 18 வயதுக்கு மேற்பட்ட, ஆரோக்கியமானவர்கள் பரிசோதனைக்கு முன்வரலாம். பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்பவர்களுக்கு காப்பீடு செய்யப்படும். தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டுக்கும், வேலைக்கும் செல்லலாம். விருப்பமுள்ளவர்கள் 7806845198 என்ற எண்ணில் அல்லது covidvaccinetrialdph@gmail.com என்ற இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x