Published : 23 Oct 2020 08:50 PM
Last Updated : 23 Oct 2020 08:50 PM

கவுண்டமணி உடல் நிலை குறித்து தவறான செய்தி: யூடியூப் சானல் மீது காவல் ஆணையரிடம் புகார்

தனது உடல் நிலை குறித்து தவறான செய்தியை வெளியிட்ட யூடியூப் சானல் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரிடம் நடிகர் கவுண்டமணி புகார் அளித்துள்ளார்.

நடிகர் கவுண்டமணி தமிழ் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகர். திரையுலகில் 1965-ம் ஆண்டுமுதல் நடித்து வருகிறார். பதினாறு வயதினிலே படத்துக்குப்பின் பிரபலமானார். 1980-களில் கொடி கட்டிப்பறந்தார். 55 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் வலம் வரும் கவுண்டமணி 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அடிக்கடி இவரது உடல் நிலைக்குறித்து தவறான செய்திகள் பரப்பப்படும். பின்னர் மறுப்பு வெளியிடப்படும். கவுண்டமணி கடைசியாக 2016-ம் ஆண்டு வாய்மை என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் நடிக்கவில்லை. தற்போது புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஒரு யூடியூப் சானல் ஒன்றில் கவுண்டமணி கவலைக்கிடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியாகி அவருக்கே போன் செய்து திரையுலகினர் நலம் விசாரித்துள்ளனர். தவறான தகவலை பரப்பிய அந்த யூடியூப் சானல் மீது நடவடிக்கை எடுக்கும் படி கவுண்டமணி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சசிகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அவரது புகாரில் “கவுண்டமணிக்கு உடல் நலம் சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஒரு யூடியூப் சானல் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலகினர் அவருக்கு போன் செய்து விசாரித்துள்ளனர்.

கவுண்டமணி குடும்பத்துடன் நலமாக உள்ளார், அவருக்கு இந்த பொய்ச் செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கும், கவுண்டமணி குடும்பத்தாருக்கும் மன உளைச்சலை அளித்துள்ளது. இதுபோன்ற பொய்யான செய்தியை பரபரப்புக்காக தவறான செய்தியை பரப்பிய சம்பந்தப்பட்ட யூடியூப் சானல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சானலை முடக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x