

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகள் தொடக்க விழா திசையன்விளை அருகே நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தின் தென் பகுதியான ராதாபுரம் திசையன்விளை நாங்குநேரி தாலுகாக்கள் மிக வறட்சியான பகுதியாகும்.
இப்பகுதிகள் பயன்பெறும் வகையில் வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை புதிய கால்வாய்கள் மூலம் இப்பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம் அவற்றை செழிப்படைய செய்யலாம் என்பதற்காக தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டமான வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ரூ.369 கோடி திட்ட மதிப்பீட்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இத் திட்டம் தொடங்கப்பட்டது. 2012-ம் ஆண்டுக்குள் திட்டத்தை முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 4 கட்டமாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் இத் திட்டத்தில் 4-ம் கட்ட பணிகளுக்கான அரசாணையை 2 மாதங்களுக்குமுன் அரசு வெளியிட்டது. இந்த பணிகளுக்காக ரூ.161 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த 4-ம் கட்ட பணிகளுக்கான தொடக்க விழா திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் பகுதியில் நடைபெற்றது. ராதாபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் இன்பதுரை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இப்பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் 2 மற்றும் 3-ம் கட்டத்தில் சில பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்தார்.
ரூ.369 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட வேண்டிய திட்டப் பணிகள் பல்வேறு அரசியல் காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டன. தற்போது இத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.933 கோடியாக உயர்ந்திருக்கிறது.