

மதுரை வக்போர்டு கல்லூரி நிர்வாகக்குழு தேர்தலுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியைச் சேர்ந்த ஏ.முகமதுமைதீ்ன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை வக்போர்டு கல்லூரி நிர்வாகக்குழு தேர்தல் அக். 27-ல் நடைபெறும் என 12.10.2020-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இக்கல்லூரி நிர்வாகக்குழு தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி முறைப்படி தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
இருப்பினும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் அவசரம் அவசரமாக தேர்தல் நடத்த முயற்சி நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. சந்தா சொலுத்தாதவர்களும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றி வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் அறிவிப்பில் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.
எனவே தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக வக்போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.