

ராமநாதபுரத்தில் நடந்த தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட 4 சொகுசு கார்கள் மற்றும் நகைகள் உள்ளிட்டவை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த், சென்னையைச் சேர்ந்த நீதிமணி ஆகியோர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி, ஆசிரியர்கள், பொதுமக்களிடம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவர் அளித்த புகாரின்பேரில் பஜார் போலீஸார் ஆசிரியர் ஆனந்த, நீதிமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பின்னர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் ஆசிரியர் ஆனந்த், நீதிமணி ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 100 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகள், 244.560 கிராம் வெள்ளி நகைகள், 4 சொகுசு
கார்கள், மடிக்கணினிகள், விதவிதமான கைக்கடிகாரங்கள், பணம் ரூ. 42 லட்சம், கைபேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் நூற்றுக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி என புகார் அளித்ததால் இவ்வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸூக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.
தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து வழக்கில் கைப்பற்றப்பட்ட கார்கள், நகைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் மதுரை பொருளாதாரக்
குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சரவணன் முன்னிலையில், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று ஒப்படைத்தனர்.
இவ்வழக்கின் ஆவணங்கள் ஏற்கெனவே பொருளாதாரக் குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருளாதாரக் குற்றப்பிரிவினர் விரைவில் ராமநாதபுரம் தனியார் நிதி நிறுவன வழக்கில் விசாரணையைத் தொடங்குவர் என்றும், அதன்பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட உள்ளதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.