Published : 23 Oct 2020 06:08 PM
Last Updated : 23 Oct 2020 06:08 PM

மார்க்சிஸ்ட் எம்.பி.சு.வெங்கடேசனுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

கரோனா தொற்று அரசியல் பிரபலங்களை பாதித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கரோனா தொற்று பிப்ரவரி மாதத்தில் தலைக்காட்ட தொடங்கி மார்ச் மாதம் பரவலாக தொடங்கியது. இதையடுத்து மார்ச் 24 அன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவியது. ஒரு கட்டத்தில் தமிழகம் இந்திய அளவில் 2 வது இடத்தில் இருந்தது.

கரோனா தடுப்புப்பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப்பணியாளர்களுடன் மக்கள் பணியில் ஈடுபட்ட அரசியவாதிகளும் பாதிக்கப்பட்டனர். பல மதிப்புமிகு உயிர்களை தமிழகம் இழந்தது. திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உயிரிழந்தனர்.

மக்கள் பணியிலுள்ள பல தலைவர்கள், அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துடிப்புமிக்க இளம் எம்பி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து பொதுவெளியில் இயங்கி வருகிறார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறித்து சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவு:

“இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன்”.

— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 23, 2020

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x