

தமிழக- ஆந்திர எல்லையில் அமைய உள்ள ஒருங்கிணைந்த தொழில் நகரத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த எம்.மணிபாலன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநில அரசு சார்பில், தமிழக-ஆந்திர எல்லையில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளடங்கிய ஒருங்கிணைந்த தொழில் நகரம், சித்தூர் மாவட்டம், மல்லவேரிபள்ளம், அரூர் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக ஆந்திர அரசு மற்றும் மயிலாப்பூரைச் சேர்ந்த சிட்டி என்ற கட்டுமான நிறுவனம் இடையே கடந்த 2006-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக அப்பகுதியில் தற்போது உரிய அனுமதி யின்றி சிட்டி நிறுவனம் மரங்களை வெட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். எனவே அப்பகுதியில் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். அந்த பகுதியில் பழைய படி பசுமை போர்வையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பை 2-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் நேற்று வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த தொழில்நகரம் அமையுமிடத்தில் 33 சதவீதம் பசுமை போர்வை இருப்பது அவசியம். அதனால் அப்பகுதியில், சித்தூர் மாவட்ட வன அலுவலரின் வழிகாட்டுதலின்படி சிட்டி நிறுவனம், 10 ஆயிரம் உள்நாட்டு வகை மரக்கன்றுகளை நட வேண்டும். அதை அந்நிறுவனம் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். அப்பணிகளை மாவட்ட வன அலுவலர், தனக்கு கீழே உள்ள அதிகாரிகளைக் கொண்டு, மரக்கன்று சுயமாக வளரும் வரை கண்காணிக்க வேண்டும். இனி அப்பகுதியில் எந்த மரத்தையும் வெட்டக்கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.