

பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியான எரிச்சநத்தம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான ராஜேஸ்வரி என்ற பெரியல் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று (அக். 23) பட்டாசுகளுக்கு திரி வைக்கும் போது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் உள்ள 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பேராயூர் அருகே உள்ள பாறைபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி வேல்தாய் (45), சிலார்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி லட்சுமி (40), காடனேரியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மனைவி அய்யம்மாள் (65), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி சுருளியம்மாள் (50) மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தன் முகநூல் பக்கத்தில், "விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவியை அளித்திட வேண்டும் என்றும், காயம்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.