Last Updated : 23 Oct, 2020 02:01 PM

 

Published : 23 Oct 2020 02:01 PM
Last Updated : 23 Oct 2020 02:01 PM

புதுச்சேரியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடக்கம்; இன்றைக்குள் தேர்தல் அதிகாரிகள் நியமனம்: மாநில தேர்தல் ஆணையர் உறுதி

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் புதுச்சேரியில் இன்று மு தொடங்கிவிட்டதாக, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 முதல் பத்து ஆண்டுகளாக இத்தேர்தல் நடைபெறவில்லை.

புதுச்சேரி அமைச்சரவைக்குத் தெரியாமல் கடந்த ஆண்டு ஜூலையில் உள்ளாட்சித்தேர்தல் ஆணையரை நியமிக்க அறிவிப்பு வெளியானது. அதன் பின்புலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதையடுத்து சட்டப்பேரவையை கூட்டி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். கடந்த டிசம்பர் 20-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி ஒரு ஆணையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று ஜன.7 அன்று உள்ளாட்சி துறை விளம்பரம் வெளியிட்டது.

இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு மார்ச் மாதம் தள்ளுபடியானது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக கேரளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான ராய் பி தாமஸை ஆளுநர் கிரண்பேடி தற்போது நியமித்துள்ளார்.

முதல்வர் நாராயணசாமி இதுபற்றி இன்று (அக். 23) கூறுகையில், "உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். கரோனாவால் காலதாமதாகியுள்ளது. தேர்தல் ஆணையர் நியமனம் சட்டவிரோதம்" என்று தெரிவித்தார்.

முதல்வரின் கருத்து பற்றி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று கூறுகையில், "புதுச்சேரிக்கு உள்ளாட்சி அமைப்புகள் தேவை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. எந்தவொரு தாமதமும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை செயல்படுத்த எங்களுக்கு சட்ட வழிகாட்டுதல் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராய் பி தாமஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தல் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. தேர்தல் அதிகாரிகள், மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோரின் நியமனம் இன்று நடந்து விடும். தொகுதி மறுசீரமைப்பு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், இறுதி செய்யும் பணிகள் நடைபெற உள்ளன.

ஏற்கெனவே பல தேர்தல்களை நடத்திய அனுபவம் எனக்குள்ளது. தற்போது கரோனா காலமாக இருப்பதால் எவ்வகையில் தேர்தல் நடத்தலாம் என்று ஆலோசிப்போம். தனி மனித இடைவெளி, வாக்காளர் வாக்களிப்பு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை, உள்ளிட்ட பல விஷயங்களை மருத்துவத்துறையுடன் ஆலோசித்துக் கருத்து பெற வேண்டும். தற்போது நடைபெற உள்ள பீகார் மாநிலத் தேர்தலை முன்மாதிரியாக இக்காலத்தில் எடுத்துக்கொள்வோம்.

குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலால் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ள அனைவருக்கும் பணியாற்ற இத்தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

தேர்தல் எவ்வளவு காலத்துக்குள் நடத்த முடியும் என்பது பற்றி தற்போது என்னால் உறுதியாக கூற இயலாது. அதற்கு அவகாசம் தேவை.

வரும் ஆண்டு வரவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நடத்த முடியுமா என்பது பற்றியும் ஏதும் தெரிவிக்க இயலாது.எனது நியமனம் சட்டவிரோதம் என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு கருத்து தெரிவிக்க இயலாது. நான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன் ஆளுநரையும், முதல்வரையும் சந்தித்தேன்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x