Published : 23 Oct 2020 12:35 PM
Last Updated : 23 Oct 2020 12:35 PM

ரூ.1298.2 கோடி மதிப்பீட்டில் 7 நிறுவனங்கள் தொடக்கம்; ரூ.10,062 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில், இன்றைய தினம் முதல்வர் வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்கள் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 9 தொழிற் திட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:

வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள்:

* திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wheels India நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த Salcomp நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம். பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி, அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இத்திட்டம் ஆகும். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில், 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத்தின் Dindigul Renewable Energy Private Limited (Phase - 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Power Gear நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.

* காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mudhra Fine Blanc நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Nash Industries India Limited நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினை சேர்ந்த BBL Daido நிறுவனத்தின் Shell bearings and bushings உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

* காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம். மேலும் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ். கிம் Hyundai Motors India Limited நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

* காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

* திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் Logistics Park திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப்பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு திட்டமாகும்.

* திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS FGk¤Â‹ Dindigul Renewable Energy Private Limited (Phase-2) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Shreevari Energy Systems நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 30.11.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Chennai SSSS Equipments நிறுவனத்தின் Earth Breaking Equipments உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Adani Gas நிறுவனத்தின் City Gas distribution திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

* திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.

* கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

முதல்வர் பழனிசாமியால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்களில், முதல்வர் அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படும் 1,000 கோடி ரூபாய் முதலீட்டிலான ஒரு திட்டமும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2 திட்டங்களும் அடங்கும். மேலும் இதே மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 6 திட்டங்களின் வணிக உற்பத்தியும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, முதல்வர் முன்னிலையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களையும் சேர்த்து, 85 திட்டங்கள், அதாவது 27.96% திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும் 187 திட்டங்கள், அதாவது 61.51% திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 89.47% (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் 28 ஆண்டுகள் பயணம் குறித்த குறும்படம்

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) 1992-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் பங்களிப்பை விவரிக்கும் வகையில், முதல்வரால் இன்று ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகை வழங்குதல்

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2019-2020ஆம் நிதி ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகையான 14 கோடியே 66 இலட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய்க்கான வரைவுக் காசோலையினை முதல்வரிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x