Published : 23 Oct 2020 11:49 AM
Last Updated : 23 Oct 2020 11:49 AM

7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன் விமர்சனம் 

7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல, பெற்றோர் மனநிலை அறிந்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் மாநில வழி பாடத்திட்டத்தில் பயின்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப்பெற முடியவில்லை. நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவு செய்து ஒராண்டு பயிற்சிப் பெற்றவர்களே பெரும்பாலும் தேர்ச்சிப்பெறும் நிலை ஏற்பட்டது.

அரசுப்பள்ளி மாணவர்கள் நீட்தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் அவர்களால் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை தீர்க்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது. செப்.15 அன்று சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

அதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கியபின்னரே கலந்தாய்வு என அரசு உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததால் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது.

இந்நிலையில் 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுதிய ஆளுநர் தான் முடிவெடுக்க 3 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படுவதாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதாக கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கெனவே 45 நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

மருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x