சின்னசேலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரயிலில் 100 நெல் அறுவடை இயந்திரங்கள் பயணம்
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சின்னசேலத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கரோனா ஊரடங்கு காலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சரக்கு ரயில் சேவை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம், நாமக்கல், கள்ளகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சிறப்பு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 12-ம் தேதி சின்ன சேலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் நலகொண்டாவுக்கு, 80 நெல் அறுவடை இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த சூரத்கல்லுக்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள், 32 வேகன்கள் கொண்ட சிறப்பு சரக்கு ரயில் மூலம் சின்னசேலத்தில் இருந்து நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.
சரக்கு ரயிலில் இணைக்கப்பட்ட பயணிகள் பெட்டியில் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
“சரக்கு ரயில் மூலம் நெல் அறுவடை இயந்திர வாகனங்களை விரைவாக கொண்டு செல்ல முடிவதுடன், சாலை மார்க்கமாக செல்லும்போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளும் தவிர்க்கப்பட்டு, குறைந்த செலவில் கொண்டு செல்ல முடிகிறது” என நெல் அறுவடை இயந்திர வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
