Published : 05 Oct 2015 09:21 AM
Last Updated : 05 Oct 2015 09:21 AM

சஸ்பெண்ட் ஆன மதுரை வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை: அடுத்த விசாரணை 11-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர்களிடம் தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று விசாரணை நடத்தியது. அடுத்த கட்ட விசாரணையை வருகிற 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை உயர் நீதின்றம் தானாகவே முன்வந்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் மீது வழக்கு தொடர்ந்தது,

இந்த வழக்கு விசாரணை யின்போது வழக்கறிஞர்கள் நடந்து கொண்ட விதம் சட்டத்துக்குப் புறம்பாக இருந்ததாகக் கூறி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி உள்பட 14 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் அதன் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டபடி ஒப்படைத்தது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள் கே.ரங்கநாதன், எம்.வரதன், மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முன்பு, மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி, வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ் குமார், சரவணன், ராமமூர்த்தி, சங்கரநாராயணன், ஆறுமுகம், அசோக், கருணாநிதி, நடராஜன், நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, வாஞ்சிநாதன், ஐயப்பராஜ் ஆகியோர் அக்டோபர் 4-ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்தில் சிறப்பு ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று விசாரணையை தொடங்கியது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜ் செயலாளர் ராமசாமி ஆகியோர் தவிர மற்ற 12 வழக்கறிஞர்களும் விசாரணைக் குழு முன்பு ஆஜராயினர்.

வழக்கறிஞர் தர்மராஜ் வெளிநாடு சென்றிருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை. எனவே அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவரது சார்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் வேண்டுகோள் வைத்தார். இதே போன்று வழக்கறிஞர் ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை வைத்தார். இருவரின் கோரிக்கைகளையும் விசாரணைக்குழு ஏற்றுக் கொண்டது.

தங்கள் மீதான நடவடிக்கை குறித்த ஆவணங்களை வழங்கு மாறு வழக்கறிஞர்கள் 14 பேர் தரப்பிலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. அதுதொடர்பான ஆவணங் கள் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வழங்கப்படும் என தெரிவித்த ஒழுங்கு நடவடிக்கை குழு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜ் செயலாளர் ராமசாமி ஆகியோர் தவிர மற்ற 12 வழக்கறிஞர்களும் விசாரணைக் குழு முன்பு ஆஜராயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x