Published : 23 Oct 2020 11:21 AM
Last Updated : 23 Oct 2020 11:21 AM

7.5 உள் ஒதுக்கீடு மசோதா; ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு

மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் மாநில வழி பாடத்திட்டத்தில் பயின்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப்பெற முடியவில்லை. நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவு செய்து ஒராண்டு பயிற்சிப்பெற்றவர்களே பெரும்பாலும் தேர்ச்சிப்பெறும் நிலை ஏற்பட்டது.

அரசுப்பள்ளி மாணவர்கள் நீட்தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் அவர்களால் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை தீர்க்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது. அந்த மசோதாவை ஜூன் மாதம் ஆளுநருக்கு அனுப்பியது.

ஆனாலும் அது ஒப்புதல் வழங்காமல் இருந்ததால் செப்.15 அன்று சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனாலும் அதற்கும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னரே கலந்தாய்வு என அரசு உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததால் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது.

இந்நிலையில் 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுதிய ஆளுநர் தான் முடிவெடுக்க 3 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படுவதாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதாக கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாணவர் நலன் கருதி ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்துல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “ தமிழகத்தில் 3054 அரசு பள்ளிகளில் 3.44 லட்சம் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து படிப்பவர்கள்.

இந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது என்பது ஆண்டுக்கு ஆண்டு மிகவும் குறைந்து வருகிறது. எனவே அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது சமநீதிக்கு முரணானது என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையை அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு செய்வது என கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழக அரசு சட்ட மசோதாவை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ஆதரவுடன் இயற்றப்பட்ட அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தால் தமிழக தொகுப்பில் உள்ள 4043 மருத்துவ இடங்களில், 300 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும், இது அவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வழிவகுக்கும்.

எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ள மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு வழக்கறிஞர் ஜெய்சுகின் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x