தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அலுவலக நிர்வாகத்தில் மிரட்டி பணிய வைக்க முயற்சி? - ஊராட்சி துணைத் தலைவர் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அலுவலக நிர்வாகத்தில் மிரட்டி பணிய வைக்க முயற்சி? - ஊராட்சி துணைத் தலைவர் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்
Updated on
1 min read

திருப்பூர் அருகே காளிபாளையம் ஊராட்சித் தலைவர் சுகன்யா வடிவேல், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனு விவரம்:

ஊராட்சி மன்றத் தலைவரான என்னை, வார்டு உறுப்பினர்களின் கீழ் செயல்பட கூறுகிறார்கள். தனி அறை, டேபிள் மற்றும் அலுவலகத்தின் சாவியை துணைத் தலைவர் கேட்கிறார். ஊராட்சியில் குடிநீர் விநியோகிப்பவர்களையும், பிளம்பரையும் மிரட்டுகிறார். தலைவராக பெண் இருப்பதால், துணைத் தலைவரே அலுவலக நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். அலுவலக நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார். ஊராட்சியில் பிரச்சினைகள் செய்ய மக்களை தூண்டுகிறார். புதிதாக உருவான ஊர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தர வேண்டாம் என்கிறார்.மேலும், என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

கடந்த 21-ம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், என்னை மிரட்டி பணியவைக்க முயற்சிக்கிறார். இப்பிரச்சினைகளுக்கு காரணமான துணைத் தலைவர் மோகன்ராஜ், 6-வது வார்டு உறுப்பினர் விமலா செல்வராஜ் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அலுவலர்கள் தெரிவித்ததாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார். ஊராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "ஊராட்சி மன்றத் தலைவரிடம் சாதியை குறிப்பிடும் வகையில் தகாத வார்த்தை எதுவும் பேசவில்லை. ஏற்கெனவே வட்ட வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), ஆட்சியர்உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியுள்ளேன். எந்த வசதியும் செய்து தர சொல்லவில்லை. நான் செல்லும் நேரங்களில் அவர்கள் இல்லாததால், ஊராட்சி அலுவலக சாவியை கேட்டேன். நான் அளித்துள்ள புகார்கள் தொடர்பாக விசாரிக்கட்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in