

புதுச்சேரி கோர்க்காடு கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் பெண் குழந்தைகள் வாத்து மேய்க்கும் தொழிலில் கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குழந்தைகள் நல மையத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வுசெய்தனர். கீழ்சாத்தமங்கலம் ஏரிக்கரை யோரம் இருந்த குடிசையில் 7 முதல் 13 வயது வரையில் 5 பெண் குழந்தைகள் இருந்ததை கண்டறிந்தனர்.
இதுபற்றி குழுவின் தலைவர் ராஜேந் திரன் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் ஆறுமுகம். அவர் கரும்பு வெட்டும் கூலித்தொழிலுக்காக புதுச்சேரி கிராமப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வாத்து மேய்க்கும் பணிக்காக தனது5 பெண் குழந்தைகளையும் விட்டுள்ளார். தலா 3 ஆயிரம் வீதம் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் கொடுத்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். அக்குழந்தைகளை தனியாக வீட்டில் அடைத்துவைத்திருந்தனர். இரவில் வீட்டில் பூட்டிவைத்து விடுவார்களாம். குழந்தைகளை மீட்டு தனியார் காப்பகத்தில் வைத்துள் ளோம். ஆறுமுகத்திடம் விசாரித்து வருகி றோம். இதுகுறித்து வாத்து பண்ணை உரிமையாளர், அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார்.