

6 மாதங்களுக்கு சாலை வரியை ரத்து செய்வதால் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தனியார் பேருந்துகள் இயங்கின. வரும் திங்கள்கிழமை முதல் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பட உள்ளது.
புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பேருந்துகளை இயக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசுப் பேருந்துகள் மட்டும் இயங்கின. ஊடரங்கு காலத்தில் தனியார் பேருந்துகள் இயங்காததால் 6 மாதத்துக்கான சாலை வரியை ரத்து செய்தால்மட்டுமே மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்து உரிமையாளர்களுடன் முதல்வர் நாராயணசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் 6 மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
காலையிலேயே புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு ஏராள மான தனியார் பேருந்துகள் வந்தன. தற்போது புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால் பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கூறுகை யில், “7 மாதங்களுக்கு பிறகு பேருந்துகளை இயக்குகிறோம். கரோனா வழிமுறையை பின்பற்றுகிறோம். பயணிகளுக்கு சானிடைசரும், தேவைப்படுவோருக்கு முகக்க வசமும் தருகிறோம். தமிழக பேருந்துகள் புதுச்சேரிக்கு வர நடவடிக்கை எடுத்தால்தான் நல்லது” என்று குறிப்பிட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்
புதுச்சேரியிலிருந்து திண்டி வனம், விழுப்புரம், மரக்காணம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க மாநிலங்களுக்கு இடையி லான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்க இன்னும் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். புதிய பேருந்து நிலையத்திலுள்ள காய்கறி கடைகளை பெரிய மார்க்கெட்டுக்கு 3 நாட்களுக்குள் முழுமையாக மாற்றி விடுவோம்” என்று குறிப்பிட்டார்.
திங்கள்கிழமை முதல்
போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ஓரிரு நாளில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வாகனங்களை சீர்செய்து, இன்ஸ்யூரன்ஸ் புதுப்பித்து ஆயுதபூஜையை கொண்டாடிவிட்டு பேருந்துகளை இயக்க தயாராகியுள்ளனர். இதனால் வரும் திங்கள்கிழமை முதல் புதுச்சேரியில் சகஜமான பொதுபோக்குவரத்து தொடங்கும்” என்று குறிப்பிட்டனர்.
ரயில் சேவை துவக்கம்
புதுச்சேரி ரயில் நிலையத்தி லிருந்து 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஹவுரா ரயில் புறப்பட்டது.