

வேலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக கவுன்டன்யா ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடர் நீர்வரத்தால் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா நீர்த்தேக்க அணை கட்டப்பட்டுள்ளது. 11.51 மீட்டர் உயரமுள்ள அணையில் 261.360 மில்லியன் கன அடி தண்ணீரையும் தேக்கி வைக்க முடியும். தமிழக -ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக கவுன்டன்யா வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை யால் மோர்தானா அணைக்கான நீர்வரத்து அப்படியே வெளி யேற்றப்படுகிறது. இதனால், கவுன்டன்யா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங் களில் வசிக்கும் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேற்று காலை நில வரப்படி அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மோர்தானா அணையில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவு கடந்து பெரும்பாடி கிராமத்தை நேற்று முன்தினம் வெள்ளநீர் கடந்துள்ளது.
அங்கிருந்து குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கான கால்வாய் வழியாக வெள்ளநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பியுள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
வரத்துக் கால்வாய் வழியாகச் செல்லும் நீர் ஏரி பகுதிக்கு வந்தடைந்ததால் சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ள னர். வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல்லூர்பேட்டை பெரிய ஏரி இந்தாண்டு முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையளவு விவரம்
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி குடியாத்தம் பகுதியில் 10.40 மி.மீ, காட்பாடியில் 1.2, மேல் ஆலத்தூரில் 7.6, பொன்னையில் 7.4, வேலூரில் 0.5, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 10.2, மோர்தானா அணை பகுதியில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 1.2 மி.மீ, காவேரிப்பாக்கத்தில் 3, அம்மூரில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.