

டிஜிட்டல் இந்தியா கோஷம் வலுப்பெற்று வரும் இந்த காலக்கட்டத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காலனியில் ஒரு வீட்டில் கூட கழிப்பறை வசதி இல்லை. அதுவும் அரசு இடம் ஒதுக்கிய ஆதிதிராவிடர் காலனியில் தான் இந்நிலை.
முப்பந்தல் அருகே உள்ளது கண்ணுபொத்தை. ஆரல்வாய் மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு, ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 1997 காலகட்டத்தில் அரசு இடம் ஒதுக்கியது. மொத்தம் 32 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் கண்ணுபொத்தை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் அங்கு வசிக்க முடியாமல் பலரும் வெளியேறி விட்டனர்.
குடிசை வீடுகள்
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சொந்தமாக வீடு, இடம் இல்லாத ஆதிதிராவிட மக்கள் கண்ணுபொத்தையில் குடி அமர்த்தப்பட்டனர். இப்போது கண்ணுபொத்தையில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இங்குள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இல்லை. குடிசை வீடுகள் தான். பெரும்பாலான வீடுகளில் ஒரு கயிற்று கட்டில் போடும் அளவுக்கு கூட இடம் இல்லை.
அந்த குடியிருப்பை சேர்ந்த அல்லி கூறும் போது, ‘மழை பெய்தால் தண்ணீர் குடிசைகளுக்குள் புகுந்திடும். இது காட்டுப்பாதை மாறி கெடக்கு. இந்த குடியிருப்பு அமைக்கும் போது அரசு பாதையும் தந்துச்சு. ஆனா அதை சீராக்கி சாலை போடல. எங்களுக்கு யாருக்கும் உடம்பு சரியில்லைன்னா இங்க ஒரு ஆம்புலன்ஸ் கூட வர முடியாது. தொட்டில் கட்டித்தான் தூக்கிட்டு போயிட்டு இருக்காங்க’ என்றார்.
எரியாத விளக்குகள்
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் தினகரன் கூறும்போது, ‘இந்த மக்கள் அரசால் இங்கு குடி அமர்த்தப்பட்டவர்கள். இருந்தும் இதுவரை பட்டா கொடுக்காததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளுடன் இம்மக்களின் வாழ்க்கை நகர்கிறது.
கழிப்பறை வசதி இல்லாததால் இன்னும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். மொத்தம் 3 தெருவிளக்குகள் உள்ளன. அதிலும் இரண்டு எரியாது. இங்கு அடிகுழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் வராது. சுடுகாடு வசதியும் இல்லை. யாராவது இறந்து விட்டால் ஆரல்வாய்மொழியில் உள்ள இந்திரா குடியிருப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. முறையான சாலை வசதியும் இல்லை. இம்மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்’ என்றார் அவர்.