Published : 23 Oct 2020 07:05 AM
Last Updated : 23 Oct 2020 07:05 AM

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நேற்று ஆட்சியர் மலர்விழி பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல இன்று (23-ம் தேதி) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியினை பார்வையிட கோத்திகல் பாறை வரை சென்று வர, அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி இன்று முதல் (23-ம் தேதி) அனுமதி வழங்கப்படுகிறது. நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கு குறைவாக உள்ள போது மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும், விடுதிகளில் தங்கவும், மீன் போன்ற உணவு பொருட்களை உட்கொள்ளவும், சமூக இடைவெளியை பின்பற்றி மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனைச்சாவடியில் கரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை மருத்துவ குழுவினர் மூலம் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவர். சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி, மணல்திட்டு வரை சென்று நீர்வீழ்ச்சியை பார்வையிட ஒரு பரிசலுக்கு பரிசல் ஓட்டியுடன் 3 சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். மேலும் ஐந்து அருவி, பொம்மசிக்கல், மாமரத்து கடவுபகுதியில் பரிசல் பயணம் செய்வதற்கும், தொங்கு பாலம் செல்வதற்கும் முதலை பண்ணை, பூங்கா செல்லவும் தடை நீடிக்கிறது, என்றார்.

ஆய்வின்போது. பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, ஆவின் தலைவர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம், வட்டாட்சியர் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x