Published : 23 Oct 2020 07:01 AM
Last Updated : 23 Oct 2020 07:01 AM

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வுக்காக மத்திய குழு நாளை டெல்டா வருகை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் அக்.24-ம் தேதி(நாளை) வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேற்று ஆய்வு செய்த பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் கடந்த அக்.1-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை கொள்முதல் செய்யும், மத்திய அரசின் முகவராக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்த அளவை எட்டியது இல்லை.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 841 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை ஈரப்பதத்தை காரணம் காட்டி திருப்பி அனுப்பக்கூடாது என கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 11 ஆயிரம் டன் நெல் அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மூட்டைகள் ஒரு வாரத்துக்குள் குறைந்துவிடும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக்கழக விஜிலென்ஸ் அதிகாரிகள் தலைமையிலான 10 குழுவினர் நாளொன்றுக்கு 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். டெல்டா அல்லாத மாவட்டங்களில் மண்டல மேலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முறைகேடுகள் குறித்து இந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய குழுவினர் வரும் 24-ம் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர். ஆய்வுக்குப் பிறகு நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வாய்ப்பு உள்ளது.

நடப்பு சம்பா பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை இயக்குநருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x