Published : 23 Oct 2020 06:32 AM
Last Updated : 23 Oct 2020 06:32 AM

ராமதாஸின் இட ஒதுக்கீடு போராட்ட அறிவிப்பால் சர்ச்சை; அதிமுக கூட்டணியில் பாமக தொடருமா?- அரசு குறித்து திடீர் விமர்சனம்; சூடுபிடித்தது சட்டப்பேரவைத் தேர்தல் களம்

சென்னை

வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டுக்காக வரலாறு காணாத போராட்டம் நடத்தப்படும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வன்னியர் சமுதாயத்துக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தின் விளைவாக 1989-ல் பாமகவை ராமதாஸ் தொடங்கினார். தனித்துப் போட்டியிட்டு 1991-ல்1 இடத்திலும், 1996-ல் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வென்று தமிழகத்தின் கவனத்தை பாமக ஈர்த்தது. 1998 மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, 4 எம்.பி.க்களை பெற்றதோடு மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

அதன்பிறகு அதிமுக, திமுக என்று மாறிமாறி கூட்டணி அமைத்த பாமக, 2014 மக்களவைத் தேர்தலில்பாஜக, தேமுதிக, மதிமுகவுடன் இணைந்து 3-வது அணியில் போட்டியிட்டது. 2016-ல் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்து போட்டியிட்டது.

அதிமுக, திமுகவுடன் கூட்டணி, 3-வது அணி, தனித்துப் போட்டி என்று சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் களத்தில் அனைத்து பரிசோதனைகளையும் பாமக செய்து பார்த்துவிட்டது. 1991-ல்இருந்து சட்டப்பேரவையில் ஒலித்த பாமகவின் குரல், 2016-ல் ஒலிக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்று பாமக திட்டமிடுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்றாலும் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக அளித்தது. அதனால் அக்கூட்டணியில் பாமக தொடர்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிமுகவை விமர்சிக்காத ராமதாஸ், முதல்முறையாக தற்போது கடும் வார்த்தைகளால் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.

‘வன்னியருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சிசெய்பவர்களும் நிறைவேற்றவில்லை. மீண்டும் ஒரு போராட்டம் நடத்தித்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம். கரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின்னர் புத்தாண்டில் வன்னியர்களுக்கான 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் தொடங்கப்படும். இந்தப் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதைச் செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்’ என்று தனதுமுகநூல் பக்கத்தில் ராமதாஸ் நேற்று பதிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாமக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘வரும் பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்பதே ராமதாஸின் இலக்கு. அதற்கான வியூகங்களை அவர் வகுத்து வருகிறார். அதுதிமுக கூட்டணியாககூட இருக்கலாம். விசிகவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை’’ என்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரிடம்பேசியபோது, ‘‘ராமதாஸ் தனது அறிக்கையில் அதிமுகவை மட்டுமல்ல, திமுகவையும் சாடி இருக்கிறார். கரோனா காலம் என்பதாலும், தேர்தல் நெருங்குவதாலும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த முடியாது என்பது ராமதாஸுக்கு தெரியும். கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற வழக்கமாக அவர் மேற்கொள்ளும் தந்திர அரசியல்தான் இது’’ என்றார்.

ராமதாஸின் திடீர் போராட்ட அறிவிப்பு குறித்து திமுக எம்.பி. ஒருவரிடம் கேட்டபோது, ‘‘திமுககூட்டணியில் 10 கட்சிகள் இருந்தாலும் பாமகவையும் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் பலகட்சிகளிடம் இருப்பது உண்மைதான். பாமகவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், விசிக இருக்கும் கூட்டணியில் இருப்பதால் பாமகவுக்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. வெற்றி பெறும் கூட்டணியில் இருக்கவே ராமதாஸ் விரும்புகிறார். பாஜகவை வீழ்த்தஎந்த சமரசத்துக்கும் விசிக தயாராகலாம். ஆனால், ஜனவரிக்கு பிறகே எதையும் சொல்ல முடியும்" என்றார். ராமதாஸின் போராட்ட அறிவிப்பால் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

டி.ஜெயக்குமார் கருத்து

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘அதிமுக கூட்டணியில்தான் பாமக இருக்கிறது. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ராமதாஸ் தனது கருத்தை கூறியிருக்கிறார். அரசிடம் அவர் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x