Published : 23 Oct 2020 06:20 AM
Last Updated : 23 Oct 2020 06:20 AM

மதுரை ‘ராமு தாத்தா’வைப் போல் சென்னையிலும் ரூ.10-க்கு உணவளிக்கும் தொழிலதிபர்: மேலும் பல இடங்களில் உணவகம் தொடங்க திட்டம்

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டி தெருவில், ஏழைத் தொழிலாளர் களுக்கு தரமான உணவை ரூ.10-க்கு விற்பனை செய்யும் தொழிலதிபர் முகேஷ் கூப்சந்தானி. படம்: ச.கார்த்திகேயன்

சென்னை

மதுரை ‘ராமு தாத்தா’வைப் போல்,சென்னை தொழிலதிபர் ஒருவர் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.10-க்குசாம்பார், ரசம், மோர், பொரியலுடன் தரமான, சுவையான உணவளித்து வருகிறார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே கடந்த 1976-ம் ஆண்டுமுதல் எளிய உணவகம் நடத்தி வந்தவர் ராமு தாத்தா. தொடக்கத்தில் காலணாவுக்கு உணவளித்து வந்த அவர், விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் உணவு விலையை உயர்த்தவில்லை.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடைசியாக ரூ.10 ஆக உயர்த்தி இருந்தார். இவரின் சேவையால் ஈர்க்கப்பட்ட சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் கூப்சந்தானி, அதே பகுதியில் சிங்கண்ண செட்டி தெருவில் உள்ள பொற்கை அம்மன் கோயில் முன்பும், ரிச்சி தெருவிலும் ரூ.10 விலையில் தினமும் உணவளித்து வருகிறார். இது ஏழை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக தொழிலதிபர் முகேஷ் கூப்சந்தானி கூறியதாவது:

கடந்த ஜூலை மாதம் ‘தி இந்து'ஆங்கில நாளிதழில் மதுரையைச் சேர்ந்த ராமு தாத்தா இறந்தது தொடர்பான செய்தி படத்துடன் வெளியானது. அதைப் படித்தபோது, இந்தக் காலத்தில் ரூ.10-க்குஉணவளித்ததும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், அவரால் முடிந்ததை செய்து சேவையாற்றியதும் தெரியவந்தது. அது என் மனதை பெரிதும் பாதித்தது.

அவரால் முடியும்போது, பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் நாம் ஏன் இங்கு ரூ.10-க்குஉணவளிக்கக் கூடாது என்று என்மனதில் கேள்வி எழுந்தது. உடனேமதுரையில் உள்ள ராமு தாத்தாவின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டேன். ஒரே மாதத்தில் சென்னையில் ஒரு சமையல் கூடத்தை உருவாக்கினேன். நான் வீட்டில் மதிய உணவு என்ன சாப்பிடுவேனோ அதே தரத்தில் வழங்க முடிவு செய்தேன்.

நான் குருவாக ஏற்றுக்கொண்ட ஷாஹென்ஷா பாபா நெப்ராஜ் பிறந்த நாளான ஆகஸ்ட் 13-ம் தேதி, ரூ.10-க்கு அரிசி சாதம், சாம்பார், பொரியல், ரசம், மோர் ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்கத் தொடங்கினேன். உண்ணும் தொழிலாளர்களுக்கு சலிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மேற்கூறிய உணவும், புதன்கிழமை சாம்பார் சாதம், ஞாயிற்றுக்கிழமை சைவ பிரியாணி வழங்குகிறேன்.

வரும் காலத்தில் சைவ பிரியாணிக்கு பாஸ்மதி அரிசியை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். அம்பத்தூர் போன்ற தொழிற்பேட்டைகளில் ரூ.10, ரூ.30 விலையில் உணவு விற்கும் உணவகம் திறக்கவும் முடிவெடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x