Published : 23 Oct 2020 06:12 AM
Last Updated : 23 Oct 2020 06:12 AM

பாலிசிக்கு அளித்த உத்தரவாதத்தின்படி காப்பீடுதாரரின் வாரிசுதாரருக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

பாலிசிதாரர் ஒருவர் காப்பீடு எடுத்த ஓராண்டுக்குள் உயிரிழந்துவிட்டார். அவரது வாரிசான வயதான தாயாருக்கு முழு இழப்பீட்டு தொகையை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் சமரச தீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) உத்தரவிட்டது. இதை எதிர்த்து காப்பீடு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பான மனு நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘காப்பீடு எடுப்பதற்கு முன்பாக பாலிசிதாரர் தமக்கு ஏதேனும் நோய் உள்ளதா என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்விதம் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே காப்பீடு அளிக்கும் நிறுவனம் காப்பீடு அளிப்பதை பரிசீலிக்கும் போது உண்மையான சிக்கலை உணர முடியும். அதேசமயம் காப்பீடு வழங்குவது என்பது முழுமையான நம்பிக்கை அடிப்படையிலேயே அளிக்கப்படுகிறது. இதன்படி காப்பீடு எடுப்பவரும் தன்னைப் பற்றி முழுமையான விவரத்தை உண்மையாக அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எனினும், ‘‘இந்த விஷயத்தில், காப்பீடுதாரரின் வாரிசாக நியமித்துள்ள 70 வயதான தாயாருக்கு இது மட்டுமே நிவாரணம். எனவே காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாலிசிதாரர் காப்பீடு எடுப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகத்தான் ரத்தவாந்தி எடுத்துள்ளார் என்று காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பார்க்கும் போது காப்பீடு எடுப்பதற்கு முன்பே அவருக்கு நோய் இருப்பதை குறிப்பிடாதது தவறுதான் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

காப்பீடு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நடைபெறும் காலத்திலேயே வாரிசுதாரருக்கு முழு இழப்பீடு தொகையும் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குக்கான செலவுத் தொகை மட்டும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். சட்ட விதி 142-ன் கீழ் வாரிசுதாரரிடம் இருந்து வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகையை வசூலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

காப்பீடுதாரர் 2014-ம் ஆண்டு காப்பீடு செய்திருந்தார். ஆனால் மே 2015-ல் அவர் உயிரிழந்துவிட்டார். இதற்கு இழப்பீடு கோரி அவருடைய வாரிசுதாரரான தாயார் மனு தாக்கல் செய்திருந்தார்.

காப்பீடுதாரர் மரணம் குறித்து விவரித்த மருத்துவ அறிக்கையில் மது காரணமாக அவர் மஞ்சள் காமாலை தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனம் மறுத்ததோடு, காப்பீடுதாரர் உண்மையை மறைத்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x