

இலவசமாகத் தடுப்பூசி அளிப்பது அரசின் கடமை. அதை மாபெரும் சலுகைபோல் முதல்வர் பழனிசாமி சித்தரிக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது, கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்தார்.
இதை ஏதோ மக்களுக்கு மாபெரும் சலுகை போல் காட்டிக்கொள்வதா என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ள முகநூல் பதிவு:
“கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரழிவுக் காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்குத் தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல முதல்வர் பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதல்வர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக்கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.