நாகை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி

நாகை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி
Updated on
1 min read

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.

நாகை மாவட்டத்தில் கரோனா பரவல் வேகம் குறைவாக இருந்தாலும் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் தீவிரமாகத் தொற்றுப் பரவி வந்தது. அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்படப் பல அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டன. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையமும் தீவிர கரோனா தொற்றுக்கு உள்ளானது.

அங்கு பணிபுரிந்த எட்டுக் காவலர்களுக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொற்று ஏற்பட்டது. அவர்கள் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் அங்கு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அருள்குமார் (54) என்பவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அருள்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

முன்களப் பணியாளர்களில் முக்கியமானவர்களான காவல்துறையினர் இப்படித் தொடர்ந்து கரோனா தொற்றுக்குப் பலியாகி வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். அவர்களின் பணியைப் பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in