தேவர் குருபூஜைக்கு மக்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வர அனுமதியில்லை: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

ராமநாதபுரம் பேருந்து நிலையம் | கோப்புப் படம்.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் | கோப்புப் படம்.
Updated on
1 min read

கமுதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவிற்கு வெளிமாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வர அனுமதியில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை விழா அக்.28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு தற்போது நிலவி வரும் கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த, அனுமதி பெற்று தேவர் ஜெயந்திக்கு வருவோர் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தும், சானிடைசர் பயன்படுத்தியும், சமூக இடைவெளியை கடைபிடித்து வர வேண்டும்.

வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதியில்லை. இருசக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு ஆட்டோ, வேன், சைக்கிள் போன்றவற்றில் வர அனுமதியில்லை.

பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் 5 நபர்களுக்கு மிகாமல் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும்.

வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஒலிபெருக்கி வைத்துக்கொண்டோ, மேள தாளங்கள் இசைத்தோ வர அனுமதியில்லை. வாகனத்தில் ஆயுதங்கள், கற்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை.

வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது.

பொது இடங்களில் ஒலிபெருக்கி வைத்தல், வெடிபோடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதியில்லை. ஜோதி ஓட்டம், முளைப்பாரி, சிலம்பம், பால்குடம் ஆகியவற்றோடு ஒரே இடத்தில் நின்றுகொண்டோ, ஊர்வலமாக செல்லவோ அனுமதியில்லை.

அன்னதானக் கூடம் அமைத்து அன்னதானம் பரிமாற அனுமதியில்லை. விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் நிறுவுவதற்கும், கைகளில் ஏந்தி நிற்பதற்கும் அனுமதியில்லை.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் பசும்பொன் வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in