

தக்காளி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து விலை வீழ்ச்சியடைந்து வருவதால், விளைவித்த செலவைக் கூட எடுக்க முடியாத நிலையில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழநி, தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர் பகுதிகளில் அதிகபரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
தக்காளிக்கென ஒட்டன்சத்திரம், பழநி, அய்யலூர் ஆகிய ஊர்களில் மொத்த மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தக்காளிகளை மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி ஒரு பெட்டி(14 கிலோ) தக்காளி ரூ.300-க்கு விற்பனையானது (ஒரு கிலோ ரூ.21.50). அப்போது வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் விற்பனையானது.
இதையடுத்து கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருகிறது. மொத்த மார்க்கெட்டில், இன்று தக்காளி ஒரு பெட்டி ரூ. 120-க்கு விற்பனையானது (ஒரு கிலோ ரூ.8.50). தற்போது வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையாகிறது.
வடகிழக்கு பருவமழை உரியநேரத்தில் தொடங்கியிருந்தால் தக்காளி செடிகள் பாதிப்புக்குள்ளாகி, ஈரப்பதம் அதிகம் காரணமாக தக்காளிபழங்கள் செடியிலேயே வெடித்து சேதமடைந்திருக்கும்.
இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து விலை சீராக இருந்திருக்கும். ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்யவில்லை.
இதனால் தக்காளி விளைச்சலுக்கு தேவையான அளவான நீர், செடியில் விளைந்த தக்காளி சேதமடையாமல் முழுமையாக அறுவடைக்கு வரும்நிலை ஆகியவற்றால் வரத்து அதிகரித்து விலை குறைய காரணமாக அமைந்துள்ளது, என்கின்றனர் வியாபாரிகள்.
இதுகுறித்து தக்காளி விவசாயி மூர்த்தி கூறுகையில், "தோட்டத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு தக்காளிகளை கொண்டுவர ஆகும் வாகன செலவு, கமிஷன் கடைக்காரர்களுக்கு தரும் கமிஷன் ஆகியவையே அதிகத் தொகை சென்றுவிடுகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு குறைவாகவே விற்பனையானது விவசாயிகளுக்கு கட்டுபடியாகத விலை ஆகும்.
தக்காளி செடி நடவு, களை எடுப்பு, நீர்பாய்ச்சுதல், பராமரிப்பு என தோட்டத்தில் செய்ய செலவை எடுக்க முடியாதநிலை தான் உள்ளது. தக்காளி விலை வீழ்ச்சிக்கு மழை பெய்யாதது தான் காரணம். பெய்திருந்தால் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்திருக்கும்" என்றார்.