Last Updated : 22 Oct, 2020 05:37 PM

 

Published : 22 Oct 2020 05:37 PM
Last Updated : 22 Oct 2020 05:37 PM

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் அரசு மரியாதையுடன் பரிவேட்டைக்கு அனுமதி: கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் பரிவேட்டை வழக்கமான அரசு மரியாதையுடன் நடத்துவதற்கு கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அனுமதி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் நவராத்திரி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. வருகிற 26ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. கரோனா ஊரடங்கால் சமூக இடைவெளியுடன் கோயிலில் தினமும் நவராத்திரி சிறப்பு பூஜை, மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பாணாசுரனை, பகவதியம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் சென்று வதம் செய்யும் பரிவேட்டை நிகழச்சி வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ளது.

ஊரடங்கால் கோயில் வளாகத்திலேயே பரிவேட்டையை எளிமையான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த பகவதியம்மன் கோயில் பக்தர்கள் சங்கத்தினர் பாரம்பரிய முறைப்படி பகவதியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக மகாதானபுரம் சென்று, அங்கேயே பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவேண்டும்.

இதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதைத்தொ£ர்ந்து கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் பரிவேட்டை நிகழ்வை நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாகர்கோவில் கோட்டாட்சியர்

அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறையினர், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பக்தர்கள் சங்கத்தினருடன் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், பகவதியம்மன் கோயில் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதன், செயலாளர் முருகன், ஆலோசகர் அசோகன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வழக்கம்போல் வெள்ளி குதிரை வாகனத்தில் இல்லாமல் சிறிய வாகனத்தில் பகவதியம்மனை பரிவேட்டைக்கு கொண்டு செல்வதென்றும். யானை, குதிரை பவனி, மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வலம் போன்றவற்றை தவிர்க்கவும் கோட்டாட்சியர் வலியுறுத்தினார். இதற்கு, நாட்டுப்புற கலைஞர்களின் ஊர்வலம், யானை, குதிரை

ஊர்வலம் போன்றவற்றை ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு தவிர்ப்பதாகவும், அதே நேரம் பாரம்பரிய முறைப்படியே வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் பக்தர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதனால் பேச்சுவார்த்தையில் வெகுநேரமாக இழுபறி நிலவியது. இறுதியாக பரிவேட்டைக்கு அம்மன் புறப்பாடை வெள்ளி குதிரை வாகனத்தில் அனுமதிப்பது என்றும், பரிவேட்டைக்கு புறப்படும் அம்மனுக்கு எப்போதும்போல் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் அரசு மரியாதையை வழங்குவதும் என்றும், மகாதானபுரத்தில் பரிவேட்டை நடத்துவதென்றும், அதே நேரம் வெள்ளி குதிரை வாகனத்தை சமூக இடைவெளியுடன் குறைந்த பக்தர்கள் சுமந்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பரிவேட்டை நிகழ்ச்சிக்கான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் 26ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பகவதியம்மன் பரிவேட்டை ஊர்வலத்திற்கான வழித்தடம், மற்றும் வெள்ளி குதிரை வாகனம் ஆகியவற்றை நாளை கோட்டாட்சியர் மயில் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x