

மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் புல்வெளி தரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘டிரைவ் இன் ரெஸ்டாரண்ட்’ தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் அழகர் கோயில் சாலை மற்றும் பெரியார் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஹோட்டல்கள் செயல்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இந்த ஹோட்டல்கள், மதுரைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு தகுந்த வகையில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டன.
மேலும், தனியார் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் போல், திருமணம், தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வர்த்தக, நட்சத்திர விடுதியாகவும் புனரமைக்கப்பட்டன.
குறைந்த கட்டணத்துடன் இலவச காலை உணவுடன் கூடிய குளிர்சாதன வசதியுள்ள அறைகள், குளிர்சாதனை வசதியில்லாத அறைகள், விசாலமான கார் பார்க்கிங், மதுபானக் கூடங்கள், குழந்தைகள் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் அதி நவீன மின் உலர் சலவையகம் வசதிகள் உள்ளன.
இதில், அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் புதிதாக 400 பேர் அமரக்கூடிய திருமண அரங்கம் பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக கடந்த ஆண்டு புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட இந்த ஹோட்டல், கரோனா ஊரடங்கால் வர்த்தகம் இல்லாமல் முற்றிலும் முடங்கியது.
தற்போதும் தொற்று நோய் பரவும் அச்சத்தால் தொழில் முனைவோர், மக்கள் ஹோட்டலுக்கு வரத் தயங்குகின்றனர். பொதுநிகழ்ச்சிகள், திருமணம் நடத்தவும் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.
அதனால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களைக் கவரும் வகையில் கரோனா தொற்று நோய் தவிர்க்கும் வகையில் ஹோட்டல் வளாகத்தில் பிரம்மாண்ட புல்வெளி தரையில் சமூக இடைவெளியுடன் கார்களை நிறுத்தி அகண்ட திரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே பல்சுவை உணவுகளை சாப்பிடுவதற்காக ‘டிரைவ் இன் ரெஸ்டாரன்ட்’ தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல் முதுநிலை மேலாளர் எம்.குணஷ்வரன் கூறியதாவது:
இந்த டிரைவ் இன் ரெஸ்ட்ரான்ட்டில், குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணக்கூடிய சீஸ் நக்கட்ஸ், பிரன்ச் ப்ரை, பாஸ்தா, சமோசா, சிக்கன் பாப்ஸ், சைனீஸ் ரைஸ், சைனீஸ் நூடுல்ஸ், மஞ்சூரியன், தந்தூரி ரொட்டி, பட்டர் சிக்கன் போன்வற்றை சிறந்த முறையில் சுடச்சுடத் தயார் செய்து வழங்கப்படுகிறது.
செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ சேர்க்காமல் உணவுகள் தரமாக தயார் செய்து வழங்கப்படுகிறது. மேலும், இதே ஹோட்டலில் தங்கும் விருந்தினர், பிற சிறப்பு விருந்தினர்களுக்காக ‘உணா’ எனப்படும் குளிரூட்டப்பட்ட பல்சுவை உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்படுகிறது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிரைவ் இன் ரெஸ்டாரண்ட் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்படுகிறது. இந்த ரெஸ்டாரன்ட்டில் கரோனா பரவலைத் தடுக்க, உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளியுடன் இருக்கைகள், கை சுத்திகரிப்பான் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகர மக்களுக்கு மட்டுமில்லாது மதுரை வரும் தொழில் முனைவோர், சுற்றுலாப் பயணிகளுக்கும் அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.