

தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் எதையும் காதுகொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள், செய்யவும் மறுக்கிறார்கள், ஆனால், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சொன்னதைச் செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் கூட்டணியில் பாமக இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. அதில் தேனி தொகுதியை தவிர அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி கண்டது. பாமக தருமபுரி தொகுதியை இழந்தது. ஆனால், அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியது.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் மக்கள் விரோதக் கொள்கைகள், கல்வி, சுற்றுச்சூழல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் பாமகவின் அறிக்கைகள் கடும் விமர்சனத்தை வைக்கும். கூட்டணிக்குப் பின் விமர்சனத்தில் சிலவற்றை வைக்காமலும், சிலவகைகளை மென்மையாகவும் பாமக தலைமை சுட்டிக்காட்டி வந்தது.
இந்நிலையில் நீட், இட ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு, மருத்துவப் படிப்பில் 50% ஒதுக்கீடு, காவிரி பிரச்சினை, வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், வெளி மாநிலத்தவருக்கு சாதாரண வேலைகளிலும் அதிகம் பணியமர்த்தப்படுவது, நெல் கொள்முதல் குறைபாடு உள்ளிட்ட பல அம்சங்களில் பாமக சுயேச்சையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்துவதை பாமக கடுமையாகக் கண்டித்தது.
தமிழக அரசு பல்வேறு விஷயங்களில் மக்களின் கருத்தையும், தமிழகத்துக்கான நலனையும் வலியுறுத்தத் தவறுகிறது எனப் பலமுறை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், மக்களின் நலன் குறித்த கோரிக்கைகளில் தமிழக அரசு என்ன கோரிக்கை வைத்தாலும் கண்டுகொள்வதில்லை என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை உதாரணம் காட்டி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சமீபகாலமாக அதிமுகவுடன் கூட்டணி என்கிற நிலைப்பாட்டில் பாமக உறுதியாக இல்லை. திமுக, அதிமுகவை சமதூரத்தில் வைத்துள்ளதாகப் பொருள்படும்படி பாமக அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர், பேராசிரியர் தீரன் பேட்டி அளித்திருந்தார். அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி கேட்பது கூட்டணி நிபந்தனையாக இருக்கலாம் எனவும் தீரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் ஆளும் அதிமுகவை நேரடியாக விமர்சித்துள்ளது கூட்டணி மாற்றம் குறித்த பாமகவின் நிலைப்பாடா? அல்லது மக்கள் பிரச்சினையில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் எழும் கோபத்தின் வெளிப்பாடா என்பது கேள்வியாக நீள்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
“ஆந்திரத்தில் ஜெகன்மொகன் ரெட்டி சொன்னதைச் செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதைக் கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.