

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் பணி ஆணை பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 13 பணிகளுக்க மே 2-ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் 9 பணிகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 4 பணிகளுக்கு பணி ஆணை வழங்கவில்லை. இருப்பினும் அந்த 4 பணிகளையும் தனியார் நிறுவனம் 60 முதல் 70 சதவீதம் முடித்துள்ளது.
இந்நிலையில் அந்த 4 பணிகளுக்கு தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பழைய டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யாமலேயே புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பணி ஆணை இல்லாமலேயே பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே பணி ஆணை வழங்கப்படாத 4 பணிகளுக்கும் செப். 29-ல் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து, பணி ஆணை இல்லாமல் பணி மேற்கொண்ட முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பணி ஆணை இல்லாமல் எவ்வாறு வேலைகள் நடைபெறுகிறது? என்பது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக். 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.