

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் சங்கீதா(65). திருநங்கையான இவர், கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து, திருநங்கை களுக்கு தேவையான உதவிகளை செய்துவந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வடகோவை அருகே சில திருநங்கைகளுடன் இணைந்து ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் பிரத்யேக உணவகத்தை தொடங்கினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல பணி முடிந்த பின்னர், கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அதன் பின்னர், அவர் மீண்டும் கடைக்கு வர வில்லை. சக திருநங்கைகள் செல்போன் மூலம் அழைத்தும், அவர் அழைப்பை எடுக்கவில்லை. இந்நிலையில், சங்கீதாவின் வீட்டு வளாகத்தில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சாயிபாபாகாலனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் சந்திரலேகா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது, வீட்டின் பின்புறத் தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டிரம்மில், சங்கீதா கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் சடலமாககிடந்ததும், சடலத்தின் மீது துணி யால் சுற்றி, உப்பு தூவப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளியை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் போட்டியின் காரணமாக சங்கீதா கொல்லப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.