

திருநெல்வேலி மாநகரை வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையாக பராமரிக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக கடைகளுக்கு முன் வண்ண குப்பைத் தொட்டிகள் மற்றும் அழகு செடிகள் வைக்கப் படுகின்றன.
திருநெல்வேலி மாநகரில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. குடியிருப்புகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை நுண்உர மாக்கும் மையங்களுக்கு கொண்டுசென்று, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
தற்போது மாநகரிலுள்ள கடைகளுக்கு முன் அழகு செடிகளையும், வண்ண குப்பைத் தொட்டிகளையும் வைக்க வியாபாரிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடைகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து பச்சை மற்றும் நீலவண்ண குப்பைத் தொட்டிகளில் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் கடைகளுக்கு முன் அழகிய செடிகள், பச்சை, நீல வண்ணங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் தங்கள் சொந்த செலவில் இந்த தொட்டிகளை வைத்து பராமரிக்கின்றனர்.
வியாபாரிகள் சங்கம்
அப்பகுதியில் கடை நடத்தும் எம்.ஜாபர் என்பவர் கூறும்போது, “வியாபாரிகள் நலச்சங்கம் மூலம் கடைகளின் முன் குப்பைத் தொட்டிகள், அழகுச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறது” என்றார்.
படிப்படியாக மாநகரின் மற்ற பகுதிகளிலும் கடைகளின் முன் குப்பைத் தொட்டிகள், அழகு செடிகள் வைத்து பராமரிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.