

தாமிரபரணி தண்ணீரை வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
திருநெல்வேலி அருகே, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மினரல் வாட்டர் மற்றும் குளிர்பான ஆலையை பெப்சி நிறுவனம் அமைக்கிறது. இதற்கு 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி, தமிழக அரசும் ஒப்பந்தம் போட்டுள்ளது. பெப்சி நிறுவனம் அங்கு கட்டிட வேலைகளை வேகமாக செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ரூ. 3,600-க்கு 36 ஏக்கர்
சிப்காட் வளாகத்தில் உள்ள 36 ஏக்கர் நிலத்தின் விலை அரசு மதிப்பில் ரூ. 5.40 கோடி, சந்தை மதிப்பில் ரூ. 15 கோடி. ஆனால், பெப்சி நிறுவனம் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ. 36 குத்தகை செலுத்த வேண்டும். 100 ஆண்டுகளுக்கு சேர்த்து குத்த கைத் தொகை ரூ. 3,600 மட்டுமே.
தாமிரபரணியில் கைவைப்பு
மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 1,000 லிட்டர் தண்ணீர் ரூ. 37-க்கு அரசால் வழங்கப்படும்.
ஆலை நிர்வாகத்துக்கு அதிகப்படியான தண்ணீர் வழங்குவதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
பெப்சி ஆலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு தகவல்களை பெற்றுள்ள, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறும்போது, `பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து பல லட்சம் ஆற்று நீரை உறிஞ்சினால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் விவசாயம் அழிந்தே போய் விடும்’ என்றார் அவர்.
தொடர் போராட்டங்கள்
பெப்சி ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. கடந்த 10-ம் தேதி நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம் நடத்தியது. 27-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசின் தொடர் நடவடிக்கை என்னவோ?