

ஆம்பூரில் நடைபெற்ற குறைதீர்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.5.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார அளவிலான மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டாட்சியர் பத்மநாபன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 157 மனுக்களை பெற்று, தகுதியுள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள 3 டாஸ்மாக் மதுபானக் கடை களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் ஆட்சியர் சிவன் அருளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதேபோல, ஆம்பூரில் நடை பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண் டும் எனவும், காவிரி கூட்டுக் குடிநீர்திட்டப்பணிகளையும் விரைவாக முடித்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும்ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பாலாற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர் சிவன் அருள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதித்த 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்ட ரியால் இயங்கும் சக்கர நாற்காலி களை ஆட்சியர் வழங்கினார். ஒரு பயனாளிக்கு நடைவண்டி, முதுகு தண்டு வடம் பாதித்த 10 நபர்களுக்கு படுக்கைகள், பார்வையற்ற ஒருவருக்கு மடக்கு குச்சி, பிரெய்லி கடிகாரம், 5 நபர்களுக்கு கருப்பு கண்ணாடிகள், மளிகைப் பொருட்கள் உட்பட ரூ.5.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
இதையடுத்து, ஆம்பூரைச் சேர்ந்த 7 பயனாளிகள் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்த ஒரு மணி நேரத்தில் 7 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டா, தகுதியுள்ள 10 பயனாளிகளுக்கு ஒரு மணி நேரத்தில் முதியோர்உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அப்துல் முனீர், துணை ஆட்சியர்கள் சதீஷ், அதியமான் கவியரசு, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.