

பேரணாம்பட்டு ஏடிஎம் இயந் திரத்தில் கறை படிந்த ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கை யாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு நகர் மலாங்குரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தபீஜ் (35). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந் நிலையில், இவர் தன் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க பேரணாம்பட்டு திரு.வி.க.நகரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்துக்கு சென்றார்.
அங்கு தன்னிடம் இருந்த 2 ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி முதலில் ரூ.20 ஆயிரமும், மற் றொரு கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் என மொத்தமாக ரூ.60 ஆயிரம் பணம் எடுத்தார். இதில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லரித்த, சாயம் போன மற்றும் கறை படிந்த நோட்டுக்களாக வந்தன.
இதைக்கண்ட முத்தபீஜ் அதிர்ச்சியடைந்தார். இவரை தொடர்ந்து அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்கள் இதைபார்த்து அச்சமடைந்து பணத்தை எடுக்காமல் திரும்பிச் சென்றனர்.
பின்னர், பேரணாம்பட்டு கிளை வங்கிக்கு செல்லரித்த ரூபாய் நோட்டுகளை எடுத்துச்சென்று அங்கு மேலாளரிடம் காண்பித்து தனக்கு வேறு ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் செல்லதரித்த ரூபாய் நோட்டுக்களை ஆய்வு செய்தார். மேலும், திரு.வி.க.நகரில் இருந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முத்தபீஜ் பணம் எடுத்ததையும் ஆய்வு செய்தார். அதன்பிறகு, செல்லரித்த ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு, முத்தபீஜூக்கு வேறு ரூபாய் நோட்டுக்களை வழங்கினார்.
வங்கி ஏடிஎம் மையத்திலேயே சாயம்போன, செல்லரித்த ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் பேர ணாம்பட்டில் நேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.